புதன், 17 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. க‌ட்டுரை
Written By Webdunia

மாயமாகும் கொண்டாட்ட வெளிகள்

- ஜா‌ன் பாபு ரா‌ஜ்

மாயமாகும் கொண்டாட்ட வெளிகள்
சென்னை சாந்தி திரையரங்கை விரைவில் இடிக்கப் போகிறார்கள் என்று அறிய நேர்ந்த போது சிறிது வருத்தமேற்பட்டது. எனது அனுபவத்தில் பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு கல்யாண மண்டபங்களாகவும், குடியிருப்புப் பகுதிகளாகவும் மாறியிருக்கின்றன. அப்போதெல்லாம் இல்லாத வருத்தம் சாந்தி திரையரங்கு விஷயத்தில் ஏற்பட்டதற்கு சமீபமாக அத்திரையரங்கில் தொடர்ச்சியாக திரைப்படங்கள் பார்த்தது காரணமாக இருக்கலாம். முக்கியமாக சிவா‌‌ஜி கணேசனின் கௌரவம் படத்தை சில வாரங்கள் முன்புதான் அத்திரையரங்கில் பார்க்க நேரிட்டது. திரையரங்கு இடிப்பை என்னிடம் சொன்ன நண்பர் இன்னொரு தகவலையும் கூறினார். திரையரங்கை இடித்துவிட்டு ஷாப்பிங் மாலுடன் கூடிய மல்டி பிளக்ஸ் கட்டப் போகிறார்களாம். நண்பர் சொன்னது உண்மையாகுமெனில் இனி ஒருபோதும் கௌரவம் படத்தை அங்கு பார்க்க முடியாது. கௌரவம் என்றில்லை அது போன்ற எந்தவொரு பழைய திரைப்படத்தையும் அந்த வளாகத்தில் எதிர்பார்ப்பதற்கில்லை. எம்.ஆர்.ராதா, எம்.‌‌ஜி.ஆர்., சிவா‌‌ஜி கணேசன் மட்டுமின்றி ஆரம்பகால கமல், ர‌‌ஜினியையும் மல்டி பிளக்ஸ்களின் ட்ரெஸ்கோட் உள்ளே அனுமதிப்பதில்லை.

திரையரங்குகள் குறித்து பேசும்போது முக்கியமானது அவை தமிழகத்தில் அறிமுகமான காலகட்டம். எனது வாசிப்பினூடாக அந்தக் காலகட்டம் குறித்த சித்திரம் ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறேன். அனேகமாக எனது நண்பர்கள் ஒவ்வொருவ‌ரிடமும் அதுபோன்றதொரு சித்திரம் உள்ளது. ஒருசில நிற வேற்றுமைகளை‌த் தாண்டி சித்திரங்களுக்கிடையே ஒற்றுமைகள்தான் அதிகம். சிறப்பாக மூன்று விஷயங்கள்.

முதலாவதாக சாதி, வர்க்க ஏற்றத் தாழ்வுகள் ஒப்பீட்டளவில் இன்றுவிட அன்று மிக ஆழமாகவும், வெளிப்படையாகவும் இருந்தன என்பது. இரண்டாவது இந்த பாகுபாடு கலைகளிலும் வெளிப்பட்டது. கீழ்சாதியின‌ரின் கலைகள் களங்கமுடையதாகவும், மேல்சாதியினர் தங்களுக்கு உ‌ரியதாக தேர்வு செய்த கலைகள் புனிதமானதாகவும் வலியுறுத்தப்பட்டன. ஒரு பரத நாட்டிய கலைஞருக்கு‌ரிய கௌரவமும், கரன்சி மதிப்பும் இன்றும்கூட ஒரு தப்பாட்டக் கலைஞருக்கு கிடைப்பதில்லை. அன்றைய வரலாற்றிலிருந்து இன்னொன்றையும் அறிய முடிகிறது. விளிம்புநிலை மக்களின் கலை வெளிப்பாடுகள் பெரும்பாலும் திறந்த வெளியிலேயே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அரங்குகள் மேட்டுக்குடியினருக்கு‌ரியது. இந்த அரங்குகளில் கீழ்சாதியினர் அனுமதிக்கப்பட்டதில்லை என்பது மூன்றாவது பு‌ரிதல்.

சாதி, வர்க்க சம்மட்டிகளால் சமூகம் கெட்டிப்பட்டிருந்த காலத்தில் திரைப்படத்தின் வருகை பெரு மழையென அமைகிறது. இறுக்கமான விதிகள் இந்த வருகையால் நெகிழ்ந்து கொண்டன. முக்கியமாக சாதி, இன, மத, வர்க்க வேறுபாடுகள் கடந்து எல்லோருக்குமான பொது வெளியாக திரையரங்குகள் உருவாயின. ஆண்டையும் அவனது அடிமையும் ஒரே அரங்கில் திரைப்படத்தை கண்டு ரசித்தார்கள். திரைப்படத்தின் வருகைக்குப் பிறகே அரங்குகள் உழைக்கும் மக்களின் கொண்டாட்ட வெளியாக மாறின. முன் வ‌ரிசை மேட்டுக்குடியினர் பின் வ‌ரிசைக்கு தள்ளப்பட்டனர். திரைப்படத்தின் வருகையால் நேர்ந்த தலைகீழ் மாற்றத்தின் சிறப்புக் குறியீடாக அமைந்தது இந்த வ‌ரிசை மாற்றம்.

ஒவ்வொரு திரையரங்கும் வெ‌வ்வேறு அனுபவங்களை தரக்கூடியது. பால்யத்தில் திரைப்படம் பார்ப்பது திருவிழா கொண்டாட்டத்திற்கு நிகரானதாக இருந்தது. திரைப்படம் பார்க்கப் போகிறோம் என்பதான அறிகுறி வீட்டில் தென்பட ஆரம்பிக்கும் போதே கொண்டாட்டத்துக்கான முரசு அதிரத் தொடங்கும். அதன் பிறகு ஒரே உற்சவம்தான். எங்கள் ஊர் தேவி திரையரங்கில் கணிசமான எண்ணிக்கையில் மரத் தூண்கள் உண்டு. தூண்கள் மறைக்காத இருக்கையை கண்டு பிடித்து அமர்வதென்பது மிகப் பெ‌ரிய சாகஸம். அப்போதெல்லாம் கண்டிப்பாக நியூஸ் ‌ரில்கள் ஒளிபரப்புவார்கள். அவற்றை பார்க்காமல் திரைப்படம் பார்த்த அனுபவம் முழுமையடையாது. வினோபா அடிகளையும், குண்டுகள் பொழியும் விமானங்களையும், கோதுமை அறுவடை செய்யும் குஜராத் விவசாயியையும் நியூஸ் ‌ரீல்கள் வழியாகவே அனுபவப்பட்டேன்.

வேறு திரையரங்குகளில் நான் கண்டிராத ஒரு வினோதம் தேவி திரையரங்கில் இருந்தது. அரங்கின் ஒரு பகுதியை நெடுக்காக மூன்றடி உயர சுவர் பி‌ரித்திருக்கும். சுவருக்கு அந்தப் பக்கம் பெண்கள். இந்தப் பக்கம் ஆண்கள். கூட்டம் அதிகமாகும்போது பெண்கள் ஆண்கள் பகுதியில் அனுமதிக்கப்படுவதுண்டு. ஆனால் ஒருபோதும் பெண்கள் பகுதியில் ஆண்கள் அனுமதிக்கப்பட்டதில்லை. அந்தவகையில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடை தேவி திரையரங்கு அந்தக் காலத்திலேயே உறுதி செய்திருந்தது.

கல்லூரியில் படிக்கையில் பெண்களுக்கு நூறு சதவீத ஒதுக்கீடு தரும் திரையரங்குகள் இருப்பது தெ‌ரிய வந்தது. குறுகலான கவுண்டர் சந்தில் வியர்வை வழிய புழுக்கத்தில் ஆண்கள் பல மணி நேரமாக தொங்கிக் கொண்டிருப்போம். அதே கவுண்ட‌ரில் மெயின் கேட் வழியாக வரும் பெண்கள் பவுடர் கலையாமல் டிக்கெட் எடுத்துச் செல்வார்கள். கவுண்ட‌ரில் நமதுமுறை வரும் போது திரையரங்கு ஊழியர் கேட்டில் மாட்ட ஹவுஸ்ஃபுல் போர்டுடன் சென்று கொண்டிருப்பார்.

இந்த அநீதியால் மனம் கசந்து நான் தஞ்சமடைந்த இடம் பயோனியர் முத்து திரையரங்கு. ஆங்கிலப் படங்கள் மட்டுமே இங்கு வெளியாகும். பெண்கள் தவறியும் இந்தப் பக்கம் திரும்புவதில்லை. பயோனியர் முத்துவில் அர்னால்டு ஸ்வாஷ்நேகரை பார்க்கச் சென்ற மதியத்தில்தான் எம். ‌‌ஜி. ஆரை சந்தித்தேன். அவர்தான் கேட்டை திறந்துவிட்டார். அது சற்றே குள்ளமான கறுத்த எம். ‌‌ஜி. ஆர். பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். அணியும் ‌‌ஜிகினா சட்டை அணிந்திருந்தார். காலை இறுகப் பிடிக்கும் கறுப்பில் வெள்ளை கோடுகள் ஓடும் பேண்ட். குளிக்கும் போதும் கழற்றுவதில்லையோ என்ற தோற்றத்தில் ஷு, கறுப்பு கண்ணாடி மற்றும் கழுத்தில் சுற்றப்பட்ட கர்ச்சீஃப். வலது கையில் கட்டியிருந்த வாட்ச், மோதிரங்கள், பாக்கெட்டிலிருந்த பேனா என அனைத்திலும் எம்.‌‌ஜி.ஆ‌ரின் உருவப்படங்கள். எம். ‌‌ஜி. ராமச்சந்திரன் என்ற நடிக‌ரின் வியத்தகு பாதிப்பிற்குள்ளாகாத பகுதியிலிருந்து வந்தவன் என்பதால் கடும் அதிர்ச்சிக்கும் ஆச்ச‌ரியத்துக்கும் உள்ளானேன். எப்படி இவரால் இந்த உடையில் நாலு பேர் மத்தியில் வர முடிகிறது? இவரது வீட்டில் இதனை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

நாட்பட்ட பழக்கத்தில் பயோனியர் முத்து திரையரங்கை எனது ஓய்வு விடுதியாக ஆக்கிக் கொண்டேன். மதியம் இரண்டரை மணி காட்சிக்கு பன்னிரெண்டு மணிக்கு சென்றாலும் திரையரங்கின் கேட் எனக்காக திறந்து கொள்ளும். நிதானமாக மதிய உணவை முடித்து திரையரங்கை அடுத்த குளத்திலிருந்து வரும் காற்றுக்கு கண்ணயர்ந்து டிக்கெட் தருவதற்கான மணிச் சத்தத்தில் விழித்துக் கொள்வேன். அப்போதெல்லாம் கறுத்த எம். ‌‌ஜி. ஆர். ஸ்டூலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி ரேடியோவில் பாட்டு கேட்டுக் கொண்டிருப்பார். கேட்டை திறந்து விடுவதைத் தவிர அவர் வேறு எந்த வேலையும் செய்து நான் பார்த்ததில்லை. டிக்கெட் தருவதில்லை, கேன்டீனில் தின்பண்டங்கள் விற்பதில்லை, ஏன் அதிகமாக பேசுவதுகூட இல்லை. பயோனியர் முத்துவில் மட்டும் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்கள் பார்த்திருப்பேன். அந்த நாட்களில் ஓ‌ரிரு முறைக்கு மேல் அவ‌ரிடம் பேசியதில்லை என்பது இப்போதும் ஆச்ச‌ரியமளிக்கிறது.

மனிதர்களில் இருப்பது போலவே வழி தவறிய ஆடுகள் திரையரங்குகளிலும் உண்டு. அனேகமாக இவை ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும். பிரமிளாக்களையும், ஷகிலாக்களையும் பிரபலப்படுத்திய பெருமைக்கு‌ரியவை இவை. நாகர்கோவில் ராஜன் பிக்சர் பேலஸ் இதற்கு பெயர் போனது. திரையரங்குக்குதான் செல்கிறோம் என்பதை பிறர் அறியாவண்ணம் உள்ளே நுழைவதும் அதே போல் அங்கிருந்துதான் வருகிறோம் என்பதை உணர்த்தாமல் மற்ற ஜனங்களுடன் கலந்து கொள்வதும் மிகுந்த சாகஸத்துக்கு‌ரிய செயல். பொதுவாக இந்த வழி தவறிய ஆடுகளின் ஊழியர்களிடம் ஒருவித நெகிழ்வுத்தன்மையை காணலாம். பெண்களின் முன்பு தங்களது அதிகாரத்தை உறுதி செய்யும் அவசியம் இல்லாததால் இவர்கள் மனக்கசப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்வதில்லை. சென்னை ஜோதி திரையரங்கில் ஒருமுறை நான் இடைவேளையில் அவசரமாக வெளியேறியது பெண்கள் கழிப்பறை இருக்கும் பகுதி. கதவுக்கு எதிரே கைப்பிடிச் சுவ‌ரில் சாய்ந்தபடி பல் குத்திக் கொண்டிருந்தார் லுங்கி கட்டிய அரங்கு ஊழியர். அவசரமாக திரும்பிய என்னை தடுத்து சொன்னார், சும்மா போ சார். யாரு இங்க வரப் போறா.

படம் பார்த்த திரையரங்குகளின் எண்ணிக்கையை குறித்து வைக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. சென்னை வந்த பிறகு இந்த எண்ணிக்கை எண்பதை தாண்டியது. அதில் ஒரு திரையரங்கு காரனோடை பாலத்தைத் தாண்டி கூட்ரோடு சந்திப்பில் இருந்தது. அதனை திரையரங்கு என்று சொல்ல முடியாது. தற்காலிக சர்க்கஸ் கூடாரம் போலிருக்கும். கூடாரத்தின் உச்சியில் இரு குழல் ஒலிபெருக்கிகள். டிக்கெட்டுக்காக கவுண்ட‌ரில் பணம் செலுத்தினால் இரண்டு விரற்கடை அகலத்தில் செவ்வக ரெக்ஸின் ஒன்று கிடைக்கும். அதுதான் டிக்கெட். கவுண்ட‌ரில் தந்து கதவருகில் வாங்கிக் கொள்வார்கள். பணி நிமித்தமாக திருவல்லிக்கேணி வந்த பிறகு ஒன்றை கவனித்தேன். பார்த்தசாரதி கோவில், எஸ்.வி. ஒயின்ஸ் இரண்டுக்கும் இணையாக ஸ்டார் திரையரங்கும் நண்பர்களின் பேச்சில் உலவி வந்தது. சிவா‌‌ஜி, எம்.‌‌ஜி.ஆர். படங்கள் திரையிடும் நாட்களில் ஸ்டார் திரையரங்கு எப்படியொரு கொண்டாட்ட வெளியாக மாறும் என்பது பற்றி தேவைக்கு மிகுதியாக கேட்டறிந்திருந்த நாட்களில் ஒன்றில் நிறை போதையும் பி‌ரியாணி பொட்டலங்களுமாக நானும் நண்பரும் உள்ளே பிரவேசித்தோம். சிறிய பார்க்கிங் பகுதியை மீன்பாடி வண்டிகளும், ‌ரிக்சாக்களும் நிறைத்திருந்தன. உள்ளே பே‌ரிரைச்சல். அது எம்.‌‌ஜி.ஆர். நடித்த படம். புரஜெக்டர் ஓடத் தொடங்கியதும் திரையருகில் பூசணிக்காய் உடைந்தது, தேங்காய்கள் சிதறின. எம்.ஜி.ஆர். திரையில் தோன்றுவதை கணித்து ச‌ரியாக சூடம் ஏற்றினான் ஒருவன். பாடல்கள் எப்போது வரும் என்பது அனேகமாக திரையரங்கில் இருந்த அனைவருக்கும் தெ‌ரிந்திருந்தது. பாடல் ஒலிக்கும் முன்பே பல திசைகளிலிருந்தும் டி.எம்.சௌந்தர்ராஜன்கள் பாடினார்கள். இருப்பது சினிமா கொட்டகையிலா இல்லை லைவ் கான்சர்ட்டின் நடுவிலா என்ற குழப்பத்தில் சுதியிறங்கிப் போன எங்களை இடைவேளையின் போது அருகிலுள்ள மது விடுதிக்கு சென்றுவர திரையரங்கு ஊழியர் மிகுந்த கருணையுடன் அனுமதித்தார்.

ஸ்டார் திரையரங்கு அனுபவத்திற்குப் பிறகு எம்.‌‌ஜி.ஆர். திரைப்படங்களின் மீதிருந்த எனது அசௌக‌ரியம் சிறிது மட்டுப்பட்டது எனலாம். அறிவுபூர்வமாகப் பார்த்தால் தனிமனித வழிபாடு எனும் சமூக சீக்குதான் அந்த கொண்டாட்டம். ஆனால் அந்த மக்கள் எம்.‌ஜி.ஆரை ஒரு கருவியாக பயன்படுத்தியதாகவே எனக்குப்பட்டது. எம்.‌‌ஜி.ஆரை முன்னிறுத்தி தங்களின் நிவைறோத கனவுகளையும், தினச‌ரி ஏமாற்றங்களையும், லௌகீக சுமைகளையும் அந்த அரங்கில் அவர்கள் கடந்து சென்றார்கள். அப்படி கடந்து செல்வதற்கு ஏதுவாக எம்.‌‌ஜி.ஆர். தன்னை வரையறுத்துக் கொண்டதாலேயே இன்றும் அவர் ஒரு திருவுருவாக அம்மக்களின் மனதில் இருப்பதாக திண்ணமாக நம்புகிறேன். அன்று ஸ்டார் திரையரங்கு அடையாளமற்ற எளிய மனிதர்களின் இருப்பை உறுதி செய்யும் வெளியாக மலர்ந்திருந்தது.

உலகமயமாக்கலுக்குப் பின்பு புதுவிதமான பிரச்சனைகளை திரையரங்குகள் எதிர்கொண்டன. முன்பு ஆண்பாவம், கரகாட்டக்காரன், சின்னதம்பி எல்லாம் ஒரு வருடம் ஓடின. நூறு, இருநூறு நாட்கள் சாதாரணம். திரையரங்கு உ‌ரிமையாளர் நான்கு படங்களை மாற்றினாலே ஒரு வருடத்தை ஓட்டிவிடலாம். இன்று ஒரு வருடத்துக்கு இருபது படங்கள்வரை தேவைப்படுகின்றன. அதிக திரையரங்குகள், குறைந்த நாட்கள், நிறைய லாபம் என்ற கார்ப்பரேட்டின் பாரசூட் திய‌ரியால் பpய படங்களுக்கே நான்கு வாரத்தில் நுரை தள்ளிவிடுகிறது. இதன் பக்க விளைவு இன்னும் மோசம். வருடத்தில் சில மாதங்கள் திரையரங்குகள் திரைப்படங்களுக்காக அகோரப் பசியுடன் காத்திருக்கும். பெ‌ரிய படங்கள் வெளியாகும் போது அதே பசியுடன் தயா‌ரிப்பாளர்கள் திரையரங்குக்காக அலைந்து கொண்டிருப்பார்கள்.

இந்தப் பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறிகளுக்கே பயோனியர் முத்து பலியாகிப் போனது. அதற்கு முன்பே எனது பால்யத்தை மகிழ்ச்சிக்கு‌ரியதாக்கிய தேவி திரையரங்கு இடிந்து கூரை தரைதட்டி புதர் மண்டிய இருண்ட காலத்திற்குப் பின் இப்போதுதான் ஒருவழியாக கார் ஷhரூமாகியிருக்கிறது. ராஜன் பிக்சர் பேலஸில் தெய்வீக சுகமளிக்கும் கூட்டங்கள் நடப்பதாக நண்பன் வழியாக அறிந்தேன். ஏதோ ஒருவகையில் அது சுகமளிப்பதை தொடர்வது ஆறுதல். ஸ்டார் திரையரங்கின் அந்திமம் நெருங்கிவிட்டதாக அவ்வப்போது தகவல்கள் வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் இதுவரை இடிக்கப்பட்டதில் கணிசமான திரையரங்குகள் இரண்டாம் மற்றும் மூன்றாம்கட்ட ‌ரிலீஸ் படங்களால் உயிர் வாழ்ந்தவை. இவை பழைய திரைப்படங்களால் போஷிக்கப்பட்டவை. இவற்றின் பெரும்பான்மை பார்வையாளர்கள் உடலுழைப்பை நம்பியிருக்கும் அடித்தட்டு மக்கள். ஒரு திரையரங்கு இடிக்கப்படும்போது உழைக்கும் மக்களின் கொண்டாட்ட வெளிகளில் ஒன்று பறிபோகிறது என்று அர்த்தம். அதேபோல் இரண்டாம் மற்றும் மூன்றாம்கட்ட ‌ரிலீஸ் படங்களையும் பழைய திரைப்படங்களையும் நம்பியிருக்கும் விநியோகஸ்தர்களின் வியாபார எல்லையும் சுருங்கிவிடுகிறது. திரையரங்குகள் இடிக்கப்படும் போதும், மல்டிபிளிக்ஸ்களாக உருமாறும் போதும் இவர்களின் எதிர்காலம் திரையரங்கைப் போல இருண்டுவிடுகிறது.
வடபழனியில் இருக்கும் திரையரங்கு உ‌ரிமையாள‌ரிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு விஷயத்தை குறிப்பிட்டார். திரையரங்கு நடத்துவது சூதாட்டமாகிவிட்டதால் திரையரங்கை வாடகைக்கு விடுவதாக முடிவெடுத்து அதனை நடைமுறைப்படுத்தி வருவதாகச் சொன்னார். யார் வேண்டுமானாலும் எந்தப் படத்தை வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம். வாடகை செலுத்தினால் போதும். பெ‌ரிய படங்கள் திரையிடும் போது வாடகைக்கு மேல் டிக்கெட் வருமானத்தில் இத்தனை சதவீதம் என்று பி‌ரித்துக் கொள்வார்கள். சேதாரமில்லாத சிறப்பான ஏற்பாடு. ஒரு வளாகத்தில் ஒரு திரையரங்கு இருந்தால் ஒரு வாடகை. அதுவே இரண்டு திரையரங்குகள் என்றால் இரண்டு வாடகை. இருக்கைகளை சொகுசாக்கி, கழிப்பறையில் டைல்ஸ் பதித்து மல்டி பிளிக்hக்கினால் வாடகைக்கு வாடகை, டிக்கெட் கட்டணத்தையும் இரட்டிப்பாக்கலாம். திருட்டு விசிடி, இணையதளம், இலவச தரவிறக்கம் எல்லாவற்றிற்கும் ஒரே சர்வரோக நிவாரணி மல்டி பிளிக்ஸ்.

இன்று சென்னை மாநக‌ரின் எல்லா சாலைகளும் மல்டி பிளிக்ஸில் முடிகின்றன. எஞ்சியிருக்கும் திரையரங்குகளும் மல்டி பிளிக்ஸ் கனவுடன் மாற்றத்துக்கு காத்திருக்கின்றன. இந்த நவீன திரையரங்குகளை ஒருவன் விரும்பவில்லை என்றால்தான் ஆச்ச‌ரியம். துல்லியமான ஒலி, தpவான ஒளி, சொகுசான இருக்கைகள், டைல்ஸ் பதித்த கழிப்பறைகள். . . ஊழியர்களும் மாறிவிட்டார்கள். நவீன திரையரங்கின் யூனிஃபார்ம் அணிந்த ஊழியர்கள் யூனிஃபார்ம் உடல் மொழியுடன் டிக்கெட் விநியோகிக்கிறார்கள், தின்பண்டங்கள் விற்கிறார்கள், சுத்தத்தையும், ஒழுங்கையும் மேற்பார்வை செய்கிறார்கள். பார்வையாளர்களும் அதே யூனிஃபார்ம் உடல் மொழியுடன் வளைய வருகிறார்கள், நாசூக்காக சி‌ரித்து சத்தம் எழாமல் கைத்தட்டுகிறார்கள், இடைவேளையில் யூனிஃபார்ம் உணவை ருசி பார்க்கிறார்கள்.

இந்த நவீன வாடிக்கையாளர்;களை இருவகையாக பி‌ரிக்கலாம். மேட்டுக்குடியினர் மற்றும் மேட்டுக்குடியினராகும் முயற்சியில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினர். நவீன திரையரங்குகளின் பகட்டும், கட்டணமும், ட்ரெஸ்கோடும் இந்த இரு பி‌ரிவினரைத் தவிர மற்றவர்களை அருகே அண்ட விடுவதில்லை. சென்னையிலுள்ள மாயாஜால், ஐநாக்ஸ், எக்ஸ்பிரஸ் அவென்யூ என்று எந்தத் திரையரங்காக இருந்தாலும் உங்களின் பக்கத்து இருக்கைக்காரர் ஒரு ‌ரிக்hக்காரராகவோ, நாயர்கடை டீ மாஸ்டராகவோ, பாசிமணி விற்கும் பெண்மணியாகவோ இருக்க வாய்ப்பில்லை. அடித்தட்டு மக்களை இந்தத் திரையரங்குகள் முற்றாக நிராக‌ரிக்கின்றன. இவர்களை அனுமதிக்கும் சாந்தி, ஸ்டார் போன்ற திரையரங்குகள் நவீனத்துக்கு மாறும் போது சென்னையின் பெருவா‌ரியான ஜனங்களுக்கு திரையரங்கு எனும் கொண்டாட்ட வெளி இல்லாமல் போவதற்கான வாய்ப்புள்ளது. சpயிலிருப்பவனோ, சாக்கடை அள்ளுகிறவனோ மேட்டுக்குடி முயற்சியில் து‌ரிதப்படாவிட்டால் அவனுக்கு விமோசனமில்லை.

சாதி, வர்க்க வேறுபாடுகள் கடந்து எல்லோருக்குமான பொது வெளியாக அறிமுகமான திரையரங்குகள் குறுகிய காலத்திலேயே வர்க்க‌ ‌ரீதியாக ஆழமான பிளவை கண்டுள்ளன. இதில் ஆச்ச‌ரியம் எதுவுமில்லை. உலகமயமாக்கலுக்கும், அதன் விளைவான நமது பிராண்டட் மனோபாவத்துக்கும் இசைவான மாற்றங்களை எல்லாத்துறைகளிலும் நாம் ஏற்படுத்திவிட்டோம். அதன் பக்க விளைவுகளில் ஒன்றுதான் நவீன திரையரங்குகள். நமது விருப்பம் விருப்பமின்மையை கடந்து இந்த மாற்றங்கள் நித்யமானவை. யோசிக்கையில் இன்னொன்றும் தோன்றுகிறது. எல்லாவற்றிலும் இந்த யூனிஃபார்ம் சுத்தமும் ஒழுங்கும் இருக்கதான் வேண்டுமா. கொஞ்சம் அழுக்காக, இரைச்சலாக ஸ்டார் திரையரங்கின் சுகாதாரமின்மையுடன் இருந்தாலென்ன.